தமிழகத்தின் வாரப் பத்திரிகையான ஆனந்த விகடன் இதழுக்கு சமீபத்தில் பேட்டியளித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான்.
அவரிடம் ‘மூச்சுக்கு முன்னூறு முறை பிரபாகரன் பற்றிப் பேசும் நீங்கள், சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான ‘மேதகு’ படம் பற்றி வாய் திறக்கவில்லையே?’ என்ற கேள்வியை செய்தியாளர் கேட்டுள்ளார்.
அதற்கு: “அதற்கு அவசியப்படவில்லை. படம் எடுத்தவர்களுக்கே என் கருத்து தேவைப்படவில்லை. என்னைப் படம் பார்த்துக் கருத்துச் சொல்லச் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. பிறகு, தேவையில்லாமல் நான் ஏன் பேச வேண்டும்? என்னைப் பொறுத்தவரை பிரபாகரன் தமிழ்ப் பேரினத்தின் தலைவர். அவரைப் பற்றி பிரமாண்டமான படைப்பாக வெளியாக வேண்டும். மிகச்சிறிய அளவில் தீப்பெட்டிப் படமாக எடுத்திருக்கக் கூடாது. அதிகாரத்துக்கு வந்தபிறகு அதற்காக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி, ‘பிரேவ் ஹார்ட்’, ‘பென்ஹர்’, ‘டென் கமாண்ட்மென்ட்ஸ்’ போல பல கட்டங்களாகத் திரையில் ஆவணப்படுத்தப்பட வேண்டும். நானும் தம்பி வெற்றிமாறனும் வெப் சீரிஸாக எடுக்கவேண்டும் எனப் பல ஆண்டுகளாகப் பேசிவருகிறோம்.'' என பதில் அளித்துள்ளார்.
இதனால், பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றை வேறு யாரேனும் முந்திகொண்டு வெப் சீரீஸ் ஆக்கும் முயற்சியில் இறங்கிவிடலாம். அது தவறாகவும் முடியலாம். எதற்காக அவர் இதை இப்போது இதை வெளிப்படுத்தினார் என நாம் தமிழர் தம்பிகள் சமூக வலைதளத்தில் விமர்சித்தும் வருகிறார்கள்.
 
																						 
														 
     
     
    
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    