விஜய் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் வரும் 9ம் தேதி திரைக்கு வர உள்ளது.
இதனிடையே, ஜனநாயகன் படத்திற்கான தணிக்கை சான்றிதழை தணிக்கை வாரியம் இதுவரை வழங்கவில்லை. இது தொடர்பாக பட நிறுவனம் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை ஐகோர்ட்டு ஜனநாயகன் தணிக்கை சான்றிதழ் வழக்கில் நாளை மறுதினம் (9 ம் தேதி) தீர்ப்பு வழங்கப்படும் என்று உத்தரவிட்டது.
வழக்கு தொடர்பான முழு விவரம்:-
நடிகர் விஜய், நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ஜனநாயகன். இந்த திரைப்படத்தை கே.வி.என். என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. எச்.வினோத் இயக்கியுள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இந்த திரைப்படம் வருகிற 9-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்காக இந்த திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால், தணிக்கை வாரியம் (சென்சார் போர்டு) தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், படத்தை தயாரித்துள்ள கே.வி.என். புரோடக் ஷன் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக ஐகோர்ட்டு நீதிபதி பி.டி.ஆஷா நேற்று பிற்பகலில் விசாரணைக்கு எடுத்தார்.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சதீஷ் பராசரன், வக்கீல் விஜயன் சுப்பிரமணியன் ஆகியோர், ''ஜனநாயகன் படம் சுமார் ரூ.500 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாமல், 22 நாடுகளில் 4 மொழிகளில் வெளியாக உள்ளது. இதற்காக தணிக்கை சான்றிதழ் கேட்டு கடந்த டிசம்பர் 18-ந்தேதி விண்ணப்பம் செய்யப்பட்டது. இந்த திரைப்படத்தை தணிக்கை வாரிய உறுப்பினர்கள் பார்த்தனர்.
பின்னர், இந்த படத்துக்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கப்படும் என்றும், அதற்காக சில காட்சிகளை நீக்கவேண்டும். சில வசனங்களை மவுனமாக்க வேண்டும் என்று மண்டல தணிக்கை வாரிய அலுவலர் கடந்த டிசம்பர் 22-ந்தேதி உத்தரவிட்டார்.
இதை ஏற்றுக்கொண்டு, அந்த காட்சிகள் நீக்கப்பட்டன. வசனங்களும் மவுனமாக்கப்பட்டன. இதையடுத்து, தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டிய நிலையில், திடீரென அந்த படத்தில் உள்ள காட்சிகள், வசனங்கள் குறித்து புகார் வந்துள்ளது. அதனால், இந்த திரைப்படத்தை தணிக்கை வாரியத்தில் உள்ள மறுஆய்வு குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளோம் என்று நேற்று முன்தினம் இ-மெயில் மூலம் தணிக்கை வாரிய தலைவர் தகவல் அனுப்பியுள்ளார்.
ஜனநாயகன் திரைப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை. அந்த படத்தை யாரும் பார்க்கவும் இல்லை. அப்படி இருக்கும்போது, அந்த படத்தில் உள்ள காட்சிகள், வசனங்கள் குறித்து புகார் செய்ய வாய்ப்பே இல்லை. யார் அப்படி ஒரு புகாரை கொடுத்துள்ளனர் என்பதும் தெரியவில்லை.
அதுமட்டுமல்ல, யு/ஏ சான்றிதழுக்கு பரிந்துரை செய்த தணிக்கை வாரிய தலைவரே, மறுஆய்வு குழுவுக்கு படத்தை அனுப்பி வைக்க அதிகாரம் இல்லை. இன்னும் சில தினங்களில் உலகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் படம் வெளியாகவுள்ள நிலையில், தணிக்கை சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிப்பது ஏற்புடையதல்ல. எனவே, தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும்'' என்று வாதிட்டனர்.
தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், “ரூ.500 கோடிக்கு எடுத்த படமாக இருந்தாலும், ஒரு கோடி ரூபாய்க்கு எடுத்த படமாக இருந்தாலும், தணிக்கை வாரியத்துக்கு அனைத்து திரைப்படங்களும் ஒன்றுதான். மனுதாரர் 9-ந்தேதி திரைப்படத்தை வெளியிடுவதாக அறிவித்து விட்டார் என்பதற்காக அவருக்கு தணிக்கை சான்றிதழ் உடனே வழங்கி விடவேண்டும் என்று அவர் நிர்பந்தம் செய்யமுடியாது.
மத உணர்வை புண்படுத்தும் விதமான காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக புகார் வந்துள்ளதால், மறுஆய்வு குழுவுக்கு படம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தணிக்கை வாரியம் சட்டப்படிதான் செயல்படுகிறது. இந்த வழக்கில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும். விசாரணையை நாளை (புதன்கிழமை) தள்ளிவைக்க வேண்டும்'' என்று வாதிட்டார்.
இதற்கு மனுதாரர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை இன்று (புதன்கிழமை) பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் என்று உத்தரவிட்ட நீதிபதி, அப்போது ஜனநாயகன் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ள புகார் மனு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் தணிக்கை வாரியம் தாக்கல் செய்யவேண்டும்'' என்று உத்தரவிட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜனநாயகன் படத்திற்கு யு/ஏ சான்று வழங்க முடிவு செய்தபின் மறு ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? படத்தில் எந்த காட்சிகள் நீக்கப்பட்டன? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அப்போது, தணிக்கைக்குழு தரப்பு வழக்கறிஞர் வாதாடுகையில், சான்றிதழ் வழங்கும் தணிக்கைக்குழு உறுப்பினர் படம் பார்த்தப்பின் புகார் அளித்ததால் மறு ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். தணிக்கையில் திருப்தி இல்லையென்றால் மறு ஆய்வுக்கு அனுப்புவது வழக்கமானது தான். படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப தணிக்கை வாரியத்தின் தலைவருக்கு அதிகாரம் உள்ளது. படத்தில் பாதுகாப்புப்படைகளின் இலச்சினைகள் உள்ளதால் அவர்களிடமிருந்து ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும். ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை வழங்குவதில் எந்த உள்நோக்கமும் இல்லை. புதிய உறுபினர்கள் படத்தை பார்க்க வேண்டியுள்ளது’ என்றார்.
இதனையடுத்து, வழக்கமாக ஒரு வாரத்தில் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படும் நிலையில் இந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க இழுத்தடிக்கின்றனர். தணிக்கை குழுவின் ஒரு உறுப்பினர் மட்டும் எவ்வாறு புகார் அளிக்க முடியும்? என்று ஜனநாயகன் படத்தயாரிப்பு நிறுவன வழக்கறிஞர் வாதிட்டார்.
இதனை தொடர்ந்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட ஐகோர்ட்டு, ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக்கோரிய வழக்கில் நாளை மறுதினம் (ஜனவரி 9) தீர்ப்பு வழங்கப்படும்’ என தெரிவித்தது வழக்கை ஒத்தி வைத்தது.
