ஜன நாயகன் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்துள்ளது.
கே.வி.என். புரொடக்சன் நிறுவனம் தயாரித்து ஹெச்.வினோத் இயக்கி இந்தத் திரைப்படம் பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று (ஜன.9) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கவில்லை.
இதைத்தொடர்ந்து, படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சான்றிதழ் வழங்க மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி. டி. ஆஷா, ஜன நாயகன் திரைப்படத்துக்கு யு/ஏ தணிக்கைச் சான்றிதழை உடனடியாக வழங்க தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட்டு இன்று தீர்ப்பளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஜன நாயகன் திரைப்படம் ஜன. 12 அல்லது 13 ஆம் தேதிகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தனி நீதிபதி தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் தணிக்கை வாரியம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டை மனுவாக தாக்கல் செய்ய தலைமை நீதிபதி அனுமதி அளித்த நிலையில், திங்கள்கிழமை அன்றே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தணிக்கை வாரியம் கோரிக்கை வைத்தது.
ஆனால், எப்போது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தலைமை நீதிபதியே முடிவெடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஜன நாயகன் திரைப்படம் வெளியாவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
