free website hit counter

லொகார்னோ திரைப்பட விழா 2021 :  தங்கச் சிறுத்தை விருது வென்றது இந்தோனேசிய திரைப்படம் 

திரைவிமர்சனம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

லொகார்னோ திரைப்பட விழாவின் உயரிய விருதான தங்கச் சிறுத்தை (Golden Leopard) இந்தோனேசிய திரைப்படமான « Vengeance Is Mine, All Others Pay Cash » வென்றது. இத்திரைப்படத்தின் இயக்குனர் Edwin, இது தென் கிழக்காசிய சினிமாவுக்கு கொடுக்கப்பட்ட மிக உயரிய கௌரவம் என்றார். நடுவர் குழுவின் இத்தேர்வு லொகார்னோ திரைப்பட விழா விமர்சர்களை பெரிதும் ஆச்சரியப்படுத்திய தீர்மானம். ஏனெனில் யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. 

இயக்குனர் எட்வின் முன்னைய திரைப்படங்கள் ஏற்கனவே பேர்லினால், ரொடெர்டாம் திரைப்பட விழாக்களில் பெரிதும் அடையாளம் கண்டிருந்தன. Impotance ஐ அடிப்படையாக கொண்டது. ஆண்குறியை விறைக்க வைத்து, உடலுறவில் விந்தணுக்களை வெளிக்கொண்டுவர முடியாத நிலையை Impotance என்கிறோம். அதனைக் கொண்டுள்ள ஒரு இளைஞனின் ரௌத்திரப் போராட்டமே திரைக்கதை. 80’ களின் ஆணாதிக்க இந்தோனேசியாவில் அது நிகழ்கிறது. உளவியல் சார் விறைக்க இயலாமையில் உடற்குறைபாடுகளாலன்றி எண்ணங்கள் அல்லது உளவியல் காரணங்களால் விறைத்தலோ பாலுறவோ கொள்ள இயலாதிருத்தல் ஆகும். விறைக்க இயலாமை ஒருவரின் ஆண்மையுடன் பார்க்கப்படுவதால் கடுமையான உளவியல் எதிர்வினைகளை ஏற்படுத்துகிறது.

அன்றாட வாழ்க்கையை வாழ்வதே போராட்டமாகிவிட தனது காதலியுடன் இணைந்து, இருவரும் சண்டைப்பயிற்சியை கொஞ்சம் கொஞ்சமாக தமது தொழிலாக்குகின்றனர். அது வெறுமனே தொழில் மட்டுமல்ல. ஆணாதிக்க உலகை எதிர்த்து நிற்கும் கருவியாக அவனது காதலி அதனை பயன்படுத்த, அவனோ தனது அங்கவீனத்தின் உளவியல் தாக்கத்தை எதிர்த்து நிற்கும் கருவியாக அதனை பாவிக்கிறான். 

« பாலியல் குறித்து எமது அன்றாட வாழ்வியலில் நாம் பெரிதாக பேசுவதில்லை. எமது கலாச்சாரம் எதையும் ஆண் தான் ஆழவேண்டும், மற்றவர்களை பாதுகாக்க வேண்டும் எனும் Machismo பண்புகளை உடையது. ஆனால், எமது பிறப்பியல் impotance பற்றி ஆண்களாக நாம் பெரிதாக பேசுவதில்லை. அதில் பாதிக்கப்படுவதும் பெண்கள் தான். அவர்களைத் தான் அதற்கும் தூற்றுவோம். இத்திரைப்படத்தில் நான் எடுத்துள்ள மையக்கருத்து அவற்றைச் சார்ந்தது » என்கிறார் இதன் இயக்குனர். இந்த திரைப்படம் ஒரு உணர்ச்சிமிக்க Melodrama வகையானது. ஆனால் B-Movies என சொல்லப்படக் கூடிய குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்படும் காமர்ஷியல் படங்களின் சாயலை ஒத்திருந்தது. 

ஏனைய விருதுகள்

நேற்றுடன் முடிவுக்கு வந்த 74வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் வாழ்நாள் சாதனையாளர் விருது இத்தாலிய ஹாரர் சினிமாவின் தந்தை என அழைக்கப்படும் Dario Argento வுக்கு வழங்கப்பட்டது. சிறந்த இயக்குனருக்கான விருது Zeros and Ones படத்தை இயக்கிய Abel Ferrara வுக்கு வழங்கப்பட்டது. குறுந்திரைப்பட போட்டிப் பிரிவில் சிறந்த சர்வதேச குறுந்திரைப்படமாக Fantasma Neon எனும் பிரேசிலிய திரைப்படம் தெரிவானது. Leonardo Martinelli இயக்கத்தில் உருவான இத்திரைப்படம், மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கும் கனவில் வாழும் Joao எனும் உணவு டெலிவரி செய்யும் ஒரு வாலிபனை பற்றிய இசைக் குறுந்திரைப்படம். அவன் பார்வையில் உணவு டெலிவரி செய்யும் அனைவரும் இசையுடனும், நடனத்துடனும் அலைகின்றனர். 

சிறந்த சுவிஸ் குறுந்திரைப்படமாக Nora Longatti இன் Chute எனும் படம் தெரிவானது.  மார்கெட்டில், தெரிவு, வீட்டில், மாடிப்படியில், கஃபேயில் என ஒரு அனைத்திடத்திலும் ஒரு பெண் திடீர் திடீரென மயங்கி விழுந்து சுய நினைவிழக்கிறாள். அவள் மற்றவர்களின் பார்வையில் எப்படி தெரிகிறாள். அவள் மற்றவர்களுடன் எப்படி தன்னை பிணைத்துக் கொள்ள முயற்சிக்கிறாள் என உருவாக்கப்பட்ட ஒரு கவித்துவ, யதார்த்தமான ஒரு குறுந்திரைப்படம் இது. 

Prix du Public எனும் மக்கள் தெரிவு விருதை ஆஸ்திரியாவில் முதலாம் உலக யுத்தத்தின் பின்னரான மக்கள் வாழ்வாதாரத்தை மையமாக கொண்ட Hinterland திரைப்படம் வென்றது. அமெரிக்க பிரபல சினிமா சஞ்சிகையான Vareity இதழ் தனக்கான பியாற்சே கிராண்டே திரைப்படமாக Aurelie Saadaa வின் Rose திரைப்படத்தை தெரிவு செய்தது. இது 80 வயதுகளிலும் ஒரு பெண்ணால் சுதந்திரமான உல்லாசமான வாழ்வை வாழ முடியும் எனும் கருப்பொருளை கொண்டு உருவாக்கப்பட்ட குடும்பத் திரைப்படமாகும். 

Open Doors எனும் தென்-தென்கிழக்காசிய சினிமாவுக்கான பிரிவில் 38’000 USD பெறுமதியான நிதியுதவியை தாய்லாந்து திரைப்படமான Useful Ghost வென்றது.  Ratchapoom Boonbunchachoke இயக்கத்தொல் உருவாகும் இத்திரைப்படத்தின் production நிதியுதவிக்காக இத்தொகை வழங்கப்பட்டுள்ளது.  அடுத்த வருடம்  தொடக்கம் 2024 வரை Open Door பிர்வு, மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளின் நலிந்த சினிமாக்களுக்கு தனது கதவை திறந்துவிடப்போகிறது.  லொகார்னோ திரைப்பட விழாவின் அடுத்த பதிப்பு எதிர்வரும் 2022 ஆகஸ்டு 3-13 வரை நடைபெறுகிறது. அது 75 வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா என்பதால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விழாவாக மாறப்போகிறது.  2021 ம் ஆண்டுக்கான லொகார்னோ திரைப்பட விழாவின் 10 நாட்களைவும் இந்த மூன்று நிமிட காணொளியில் காண்பித்திருக்கிறார்கள் 

 புகைப்படங்கள் > © Locarno Film Festival / Ti-Press / Massimo Pedrazzini

- 4தமிழ்மீடியாவுக்காக லொகார்னோவிலிருந்து ஸாரா

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction