கடந்த திங்கட்கிழமை, ஏப்ரல் 21, ஈஸ்டர் திங்கட்கிழமை அன்று காலை, தனது 88 வயதில் காலமான போப் பிரான்சிஸுக்கு வத்திகானில் இறுதி இறுதிப் பிரியாவிடை நடைபெற்றது.
வத்திக்கான் செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில், இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகிய இறுதிச் சடங்கு திருப்பலியை கார்டினல் டீன் ஜியோவானி பாட்டிஸ்டா ரே நடத்தி வைத்தார்.
போப் பிரான்சிஸ் பெரிதும் நேசித்த மக்களாகிய, ஏழைகள், கைதிகள், மற்றும் திருநங்கைகள் அடங்கிய குழு, கையில் ஒரு வெள்ளை ரோஜாக்களுடன், பசிலிக்கா முன் மணிக்கணக்கில் காத்திருந்தனர். இறுதி நிகழ்வில், ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம், பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, ஸ்பெயின், பிரிட்டிஷ் அரச குடும்பத்தினர், இத்தாலியக் குடியரசின் தலைவர் செர்ஜியோ மட்டரெல்லா உட்பட பல்வேறு நாட்டுத் தலைவர்களும், அரசியற் பிரிதிநிதிகளும் கலந்து கொண்டார்கள். போப்பிற்கான இறுதி பிரியாவிடை செலுத்துவதற்காக, வத்திக்கானிலும், வத்திக்கானிலிருந்து அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட சாண்டா மரியா மாகியோர் பசிலிக்கா வரையிலுமான வீதிகளிலுமாக 250,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருந்து, கைகளைத்தட்டி, " நன்றி போப் " என வழியனுப்பி வைத்தார்கள்.
போப்பாண்டவரின் இறுதி நிகழ்வுக்கு வந்திருந்த அரசியற் தலைவர்கள் பலரும், பரஸ்பர சந்திப்புக்களையும் மேற்கொண்டிருந்தார்கள். குறிப்பாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி , உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பில் பேச்சுகளை நடத்தியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மேற்குல ஊடகங்களில் குறிப்பாக அமெரிக்க அதிபர் டிரம்பும், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியின் சந்திப்புக் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டுகளில் நடந்த பல போர்களின் போது ஏற்பட்ட, எண்ணற்ற இறப்புகள் மற்றும் அழிவுகளை நிறுத்துமாறு போப் பிரான்சிஸ் கேட்டிருந்தார். அமைதியை நிலைநிறுத்தச் சாத்தியமான தீர்வுகளைக் கண்டறியவும் வலியுறுத்தினார். அவர் வாழும் நாட்களில் சாத்தியப்படாத சமாதானத்தை அரசியற்தலைவர்கள் ஏற்படுத்துவார்களேயானால், அவரது மறைவிற்கான உண்மையான அஞ்சலியாக அமையும்.