தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த அமைச்சர் கே.என். நேருவின் மகன், உறவினர் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக இருப்பவர் கே.என்.நேரு. இவரது மகன் அருண் நேரு, பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ளார். கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன். இவர் ‘ட்ரூ வேல்யூ ஹோம்ஸ்' (டிவிஹெச்) என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
கடந்த 1997ஆம் ஆண்டு கோவையில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் மூலம் கோவை, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த நிறுவனம் மேற்கொண்ட பண பரிவர்த்தனைகளில் முறைகேடு நடந்ததாகக் கூறி, வருமான வரித் துறை அதிகாரிகள் ஏற்கெனவே சோதனை நடத்தி இருந்தனர்.
இந்த நிலையில், கே.என். நேருவின் மகன் அருண் நேரு எம்பி., அவரது சகோதரர் ரவிச்சந்திரன் தொடர்புடைய இடங்களில் இந்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். சென்னை, திருச்சி, கோவை நகரங்கள் என மொத்தம் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் இந்த சோதனையை மேற்கொண்டனர்.
திருச்சி தில்லைநகர் 5-வது குறுக்கு தெருவில் உள்ள அமைச்சர் கே.என்.நேருவின் வீட்டுக்கு, 5 கார்களில் 10-க்கும் மேற்பட்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று காலை 6.45 மணி அளவில் வந்தனர். பாதுகாப்புக்கு துணை ராணுவ படையினருடன் உடன் வந்திருந்தனர்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் 3-வது குறுக்கு தெருவில் நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் நடத்தி வரும் டிவிஹெச் கட்டுமான நிறுவன அலுவலகம் மற்றும் மின் உற்பத்தி நிறுவனங்களில் 10-க்கும் மேற்பட்ட அமலாக்கத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
கோவை ஜிவி ரெசிடென்சி மசக்காளிபாளையம் சாலை பகுதியில் அமைச்சர் நேருவின் இன்னொரு சகோதரர் மணிவண்ணன் வீடு அமைந்துள்ள டிவிஹெச் ஏகாந்தா அடுக்குமாடி குடியிருப்பில் 3 அதிகாரிகள் சோதனை நடத்தினர். திருச்சியில் அமைச்சர் நேரு வீட்டில் நடந்த சோதனை, நேற்று மாலை நிறைவடைந்தது. மற்ற இடங்களில் சோதனை நீடித்தது.
அமலாக்கத் துறை அதிகாரிகள் அளித்த விவரங்களின்படி, கடந்த 2013-ல் வங்கிகளில் பெறப்பட்ட கடன் தொகை சம்பந்தமாக சிபிஐ 2021-ல் ஒரு வழக்கு பதிவு செய்து, அது தொடர்பாக சோதனை நடந்ததாக திமுக மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.