போர் பதற்றத்திற்கு மத்தியில் நாடு தழுவிய பாதுகாப்பு ஒத்திகை நடத்துமாறு மாநில அரசுகளை உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா, பாகிஸ்தான் மீதும் பாகிஸ்தான், இந்தியா மீதும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது இரு நாடுகளிடையே போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்த சூழலில் இரு நாடுகளும் ஏவுகணை சோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இரண்டு நாடுகளும் தங்கள் ராணுவ படைகளை தயாராக வைத்திருக்கும் அதே வேளையில், அதிகபட்ச பொறுமையை கையாள வேண்டும் என ஐநா அறிவுறுத்தியது. இதற்கிடையே இஸ்ரேல், அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இரு நாடுகளிடையே மத்தியஸ்தம் செய்ய சீனா விருப்பம் தெரிவித்தது.
இந்த நிலையில் உள்துறை அமைச்சகம், நாடு தழுவிய பாதுகாப்பு ஒத்திகை நடத்துமாறு மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி மே 7 ஆம் தேதி வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை சைரன்களை இயக்குதல், தாக்குதலில் இருந்து பொதுமக்கள் தப்பிக்க பயிற்சி அளிப்பது, விபத்துகளின்போது பாதுகாப்பு நடவடிக்கைகளை வழங்குதல், தாக்குதலில் இருந்து தப்பித்துக்கொள்ளவதற்கான புதிய திட்டத்தை ஏற்படுத்துதல் போன்றவற்றில் ஒத்திகை நடத்துமாறு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.