free website hit counter

நீ உச்சத்திலேயே இரு! விஜய் மீது சீமான் காட்டம்?

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

திமுக, அதிமுகவின் கொள்கைத் தலைவர்களை ஒன்றாகக் கொண்டு வந்திருப்பதாக தவெக தலைவர் விஜய் மீது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

தவெக கூட்டம் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

தவெக குறித்து செய்தியாளர்களுடன் சீமான் பேசுகையில்,

``மக்களுக்குச் சேவைசெய்ய வந்துள்ளேன் என்றுதான் சொல்ல வேண்டும். நான் உங்களுக்காக என்னுடைய உச்சத்தை, வருவாயை விட்டுவிட்டு வருகிறேன் என்று சொன்னால், உன்னை யார் வரச் சொன்னது என்ற கேள்விதான் எழுகிறது. 600 ஏக்கர் நிலத்தை நாட்டுக்கு எழுதிவைத்த செம்புலிங்கம் முதலியார் இப்படித்தான் பேசினாரா? செக்கிழுத்த செம்மல் வஉசி இப்படித்தான் பேசினாரா?

உன்னை யார் வரச் சொன்னது. நீ உன் உச்சத்திலேயே இரு, வருவாயையே பார்த்துக் கொள் என்றுதான் சொல்லத் தோன்றும். இது ஒரு தலைவனுக்கு அழகல்ல. இது என் கடமை, செய்கிறோம் என்றுதான் வரவேண்டும்.

அவர் என்னுடைய தம்பி. அதனால், அப்படி சொல்லக் கூடாது என்று சொல்லக் கூடிய கடமை எனக்கு உள்ளது.

2008-ல் திமுக, காங்கிரஸ் ஆட்சியின்போது, எந்த விடுதியிலும் தங்குவதற்கு எனக்கு இடம் தர மாட்டார்கள். சிறையிலும் எனக்கு மட்டும் தனிச் சிறை. நான் ஏசி அறையில் இருந்துகொண்டு கட்சி ஆரம்பித்தவன் அல்ல; சிறையில் இருந்து ஆரம்பித்தவன்.

நீ வர வேண்டும் என்று சொன்னேன். ஆனால், வரும்போது பெரியார், அண்ணா, எம்ஜிஆரை கொண்டு வருவது தெரியாது. திமுகவை தொடங்கிய அண்ணாவையும், அதிமுகவை தொடங்கிய எம்ஜிஆரையும் ஒன்றாக்கிக் கொண்டு வருகிறார். இதை எதிர்த்துத்தான் போராடிக் கொண்டிருக்கிறோம். அப்படியிருக்கையில், இரண்டையும் ஒன்றாகக் கொண்டு வருபவரைத்தான் முதலில் போட வேண்டும் என்று தோன்றும்.

நான் ஆள் மாற்றம், ஆட்சி மாற்றத்துக்கு வரவில்லை. அரசியலமைப்பு அடிப்படை மாற்றத்துக்காக வந்திருக்கிறேன். என்னுடைய கூட்டத்தில் இளைஞர்கள் அநாகரிகமாக ஆர்ப்பரிக்க மாட்டார்கள்’’ என்று தெரிவித்தார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula