website analysis

திருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மதுரை திருப்பரங்குன்றத்தில் மலை மீதுள்ள கல்தூணில் நாளை, நவ. 28 சனிக்கிழமை, தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் கார்த்திகை திருநாளில் தீபமேற்றுமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு நிறைவேற்றவில்லை என தொடரப்பட்ட 3 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது.

தமிழக அரசு மற்றும் மனுதாரர்கள் என இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், பிற்பகல் 2.30 மணியளவில் உத்தரவுகளைப் பிறப்பித்தது.

கார்த்திகை மாதம் முடிவடைவதற்குள் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் ஒரு முறை தீபம் ஏற்றப்பட வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

மனுக்கள் விசாரணைக்குப் பின் நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் மனுபாய் பஞ்சோலி தலைமையிலான அமர்வு தெரிவித்ததாவது:

நீதிமன்றத்தின் உத்தரவு செயல்படுத்தப்படாமல் இருந்தது கடும் வேதனையை அளிக்கிறது. நீதிமன்ற உத்தரவுகள் மெத்தனமாகக் கையாளப்படும்போது, அதனைப் பார்த்துக்கொண்டு நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். இத்தகைய சூழ்நிலைகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டிய நிலைமை ஏற்படுகிறது.

இல்லையெனில், அது அரசியலமைப்பு சார்ந்த குழப்பத்துக்கு வழிவகுக்கும். நீதிமன்றத்தின் உத்தரவு மீறப்படும்போது, எங்களால் செயலற்று அமர்ந்திருக்க முடியாது. எந்தவோர் அதிகாரத்துக்கும் உச்ச நீதிமன்றம் அடிபணியாது.

ஜனநாயக சமூகத்தில் சட்டத்தின் ஆட்சி என்ற கோட்பாடே உயர்ந்ததாகும். நீதித் துறையை மாசுபடுத்தும் எந்தவொரு முயற்சியும் சகித்துக் கொள்ளப்பட மாட்டாது.

இந்திய ஆட்சிப் பரப்புக்குள் உள்ள அனைத்து சிவில் அதிகாரிகளும் உச்ச நீதிமன்றத்துக்குத் துணைநின்று செயல்பட வேண்டும். நீதித் துறைக்கு சிவில் அதிகாரிகள் துணை நிற்பதை அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 144 உறுதி செய்கிறது.

மதுரையில் நிர்வாகச் சீர்குலைவு ஏற்பட்டிருக்கிறது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அதிகாரிகளின் செயல்பாடுகள் நிர்வாகச் சீர்குலைவை வெளிப்படுத்துகின்றன.

சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், அதிகாரிகள் மீதான அவமதிப்பு குற்றச்சாட்டுகள் தெளிவாகின்றன."

மேலும், நீதிமன்றத்தின் தீர்ப்பைச் செயல்படுத்தாததற்கான பழியை கோயில் நிர்வாகத்தின் மீது மதுரை ஆட்சியர் சுமத்த முயற்சிப்பதாகக் கூறிய நீதிபதிகள், ஆட்சியரின் அறிக்கை திருப்தி அளிக்கவில்லை என அவருடைய மனுவை நிராகரித்தனர்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாகத் தலைமைச் செயலாளர் சாய் குமார் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. மட்டுமின்றித் தலைமைச் செயலாளர், டிஜிபி, அறநிலையத் துறை ஆணையர், மதுரை ஆட்சியர், மதுரை காவல் ஆணையர் ஆகியோருக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

தொடர்ந்து, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் நாளை (நவ. 28) தீபமேற்றவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சிப் பிள்ளையார் கோயிலில் ஏற்றப்பட்ட தீபத்திலிருந்து சுடரை எடுத்துச் சென்று கல் தூணில் ஏற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், பக்தர்கள் மலைக்குச் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டது.

திருப்பரங்குன்றம் கோயில் அறங்காவலர் குழு கலைக்கப்படுவதாகக் குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், மறு உத்தரவு வரும்வரையில் அறங்காவலர் குழு செயல்படக் கூடாது என்றும் தெரிவித்தது. தொடர்ந்து, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன், பி. பார்த்திபன் ஆகியோர் தலைமையில் கோயிலை நிர்வகிக்க குழுவை அறிவித்தது.

தொடர்ந்து, திருப்பரங்குன்றம் மலைத் தூணில் தீபமேற்றுவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை, டிசம்பர் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்