free website hit counter

ஹப்பிளுக்கு (hubble) நன்றி சொல்வோம் !

பதிவுகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

விஞ்ஞானத் தகவல்களை இலக்கிய நயத்துடன் தருவதென்பது இலகுவானதல்ல. ஆனால் அது ஷியான்_யாக்கூப் வாய்த்திருக்கிறது. மிக எளிமையான தமிழில், சமகால விஞ்ஞானத் தகவலொன்றை இலக்கிய அழகியலுடன் தந்திருக்கும் வகையில் அவரது ஹப்பிள் தொலைக்காட்டியின் வரலாறு குறித்த இக்குறிப்பு சிறப்புறுகிறது. அந்த இலக்கிய அனுபவத்தினை  4தமிழ்மீடியா வாசகர்களும் சுவைப்பதற்காக, படைப்பாளிக்கான நன்றிகளுடன், அதனை இங்கே மீள்பதிவு செய்கின்றோம். -4TamilmediaTeam

பிரபஞ்சத்தின் இருளுக்குள்  நட்சத்திரங்கள் நேரத்தை விட பழமையான இரகசியங்களை கிசு கிசுகிசுத்துக் கொண்டிருந்த போது பூமியில் ஒரு தொலை நோக்கி பிறந்தது. அதற்கு ஹப்பிள் என்று பெயரிட்டனர். பிரபஞ்சத்தின் அதிசயங்களை உள்வாங்கும் அகலமான கண்களைக் கொண்ட ஒரு தொலைநோக்கி அது.

1990 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 இல் டிஸ்கவரி விண்கலத்தால் விண்ணுக்கு ஏவப்பட்டது. வளிமண்டலத்தை ஊடறுத்து மேலெழுந்த போது ஹப்பிள் விழித்தெழுந்து முடிவிலியை நோக்கி கண் சிமிட்டியது. நட்சத்திரங்கள் தமது சேதியை எத்தி வைக்க வந்திருக்கும் தூதனென அதன் பெயரைப் பாடின. ஆனால் ஹப்பிள் எடுத்த முதல் படத்திலேயே எல்லாம் தலைகீழாக மாறிப் போனது. அதன் முதல் பார்வை தெளிவற்ற மங்கலான படங்களை தந்து ஏமாற்றியது.

துல்லியத்துடன் வடிவமைக்கப்பட்ட கண்ணாடி, அதன் வளைவில் ஒரு மெல்லிய குறைபாட்டைக் கொண்டிருந்தது.
அதன் கனவுகளில் தெளிவாகவும், பளிங்கு போலவும் இருந்த வானம், அது எடுத்த படங்களில் மங்கிய நீர்வண்ண ஓவியமாகத் தோன்றியது. இதற்காக பல ஆண்டுகளையும், பில்லியன் கணக்கான பணத்தையும் செலவு செய்த விஞ்ஞானிகள் மீதான வசை பாடல் ஆரம்பமானது. ஆனால் விஞ்ஞானிகள் தங்கள் குழந்தையின் தோல்வியை ஏற்க மறுத்தனர். 1993 இல் அவர்கள் ஹப்பிளின் பார்வையை சரிசெய்ய தம் வீரர்களை அனுப்பினர். கருவிகளையும், துணிச்சலையும் கொண்டு அவர்கள் அதன் கனவுகளை மெருகேற்றினர். பிரபஞ்சத்தை தெளிவாக்கும் கண்ணாடிகளைப் பொருத்தினர். 

மீண்டும் ஹப்பிள் விழித்துக் கொண்ட போது அது பிரபஞ்சத்தின் நித்தியத்தைக் கண்டுகொண்டது. பூமியிலிருந்து 520 km உயரத்தில், அமைதியான வெற்றிடத்தில் மிதந்த படி ஹப்பிள் எந்தக் கவிஞனாலும் கற்பனை செய்ய முடியாத கதைகளை நெய்தது. அது நட்சத்திரங்களின் பிறப்பிடங்களை உளவு பார்த்தது. அங்கு வாயுக்களும், தூசுக்களும் பிரபஞ்ச நடனத்தில் சுழன்று  வெப்பமான சூரியன்களைப் பெற்றெடுத்தன. வெடித்து மறையும் நட்சத்திரங்களின் உக்கிரமான மரணங்களையும் அது கண்டது. அவற்றின் சிதறிய சாம்பல்கள் புதிய படைப்புகளாக உருவாகும் இரகசியங்களையும் அறிந்து கொண்டது.

பல கோடி ஆண்டுகளாக ஈர்ப்பு விசையால் காதலர்களைப் போல பிண்ணிக் கொள்கின்ற விண்மீன் பேரண்டங்களை பார்த்து அது பரவசமடைந்தது. யாருமறியா பிரபஞ்சத்தில் பேரண்டங்கள் நிகழ்த்தும் விநோதங்களில் அது மெய் மறந்திருந்தது. ஒரு நாள் மணல் துகள் அளவிலான வானத்தின் இருளான ஒரு புள்ளியை நோக்கி சில நாட்கள் விழித்த படி காத்திருந்தது. அந்த வெற்றுப் புள்ளியில் ஹப்பிள் ஆயிரக்கணக்கான விண்மீன் பேரண்டங்களை வெளிப்படுத்தியது. ஒவ்வொரு பேரண்டங்களும் தமக்குள் பல கோடி விண்மீன்களை சுமந்திருந்தன. ஒவ்வொரு விண்மீன்களிடமும் ஓராயிரம் கதையிருந்தன. 

ஹப்பிள் வெறும் இயந்திரமல்ல. அது மனிதகுலத்தின் கண்ணாடி. பார்க்க முடியாதவற்றின் மீதும், தொடவும் முடியாதவற்றின் மீதும்  மனிதனுக்குள்ள ஏக்கத்தின் பிரதிபலிப்பு. அது தந்த படங்கள் நமக்கு கவிதையாகின. விஞ்ஞானிகள் தம் குழந்தையின் பேராற்றலை கண்டு மெய்சிலிர்த்தனர். ஆனால் ஹப்பிள் அழிவற்ற ஒரு படைப்பல்ல. அதன் வெற்றிகளை இப்பிரபஞ்சம் பொருட்படுத்தவில்லை. கதிர்வீச்சுகள் அதன் மின்சுற்றுகளை அரித்தன, சூரிய புயல்கள் அதன் இறக்கைகளை கிழித்தன.

ஐந்து முறை விண்வெளி வீரர்கள் அதனை பழுது பார்த்தனர். ஒவ்வொரு முறையும் மனிதகுலம் அதன் கண்களை மங்க விடாதென்று உறுதிமொழி எடுத்தது. ஆனால் காலம் இரக்கமற்றது. 2025 இல் மீண்டும் அதன் ஒளி மங்கத் தொடங்கியது, அதன் சுற்றுப்பாதை சரிந்தது, அதன் உடல் நலிவடைந்தது. விஞ்ஞானிகள் அதன் இறுதி யாத்திரை குறித்து விவாதித்து வருகின்றனர். அது நேசித்த நட்சத்திரங்களுக்கு இடையில் காலத்துக்கும் அதை மிதக்கச் செய்வதே அதற்கு அளிக்கும் மரியாதையும், நன்றிக்கடனாகவும் இருக்குமென்று கருதுகின்றனர். 

35 வருடங்களாக ஹப்பிள் நமக்கு பிரபஞ்சத்தை காட்டியது. அதனூடாக நம்மை பற்றி நமக்கே அது பாடமெடுத்தது. அதன் சேவைகளுக்காக ஒரு தடவையேனும் நன்றி செலுத்துங்கள். அதன் ஆற்றலையும், வெற்றிகளையும் போற்றுங்கள். 

எழுத்தாக்கம். நன்றி: ஷியான்_யாக்கூப்

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula