free website hit counter

கி.ராவும் நானும் - தங்கர் பச்சான்

முற்றம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கி.ராஜநாராயணன் 98 ஆண்டு காலங்கள் வாழ்ந்திருக்கிறார். இதில் 60 ஆண்டுகள் தமிழுக்காக மட்டுமே வாழ்ந்திருக்கின்றார். எனது திரைத்துறை அறிமுக ஆண்டிலிருந்து இன்றுவரை 33 ஆண்டுகளும் அவர் குறித்தே அதிகமாகப் பேசியிருக்கிறேன்.

சரியாக 40 ஆண்டுகளுக்கு முன் கி.ரா வின் அறிமுகம் கிடைத்தது. அவருடைய “பிஞ்சுகள்” குறுநாவல் இல்லையென்றால் இன்றைக்குள்ள நான் இல்லை. எனது இலக்கிய படைப்புகள் திரைப் படைப்புகளை வடிவமைத்தது அவரின் எழுத்துக்கள்தான். எனது ஆசான்,குடும்பத்தலைவர்,எதையும் ஒளிவில்லாமல் பேசி கலந்துரையாடும் நெருங்கிய நண்பராகவும் இருந்தார்.

திரைத்துறைக்கு வரும் முன்பே எனது அப்பாவை நான் இழந்துவிட்டதால் அவரை “அப்பா” என்றே அழைத்தேன். எனது திருமண அழைப்பிதழைக்கூட அப்பாவின் கையினாலேயே எழுத வைத்து நகல் எடுத்து உறவினர்களுக்கும்,நண்பர்களுக்கும் வழங்கினேன். கடித்ததொடர்பிலேயே எங்களின் உறவு வளர்ந்தது. கி.ரா நண்பர்களுக்கு எழுதிய கடதங்கள் மட்டுமே இரண்டு நூல்களாக வெளிவந்துள்ளன. கடிதங்களை இலக்கியமாக்கியர் கி ரா. அப்பா எனக்கு எழுதியக்கடிதங்கள் எனது சொத்துக்களை விடவும் மதிப்பு வாய்ந்தவை.

எனது முதல் இலக்கிய நூலான “வெள்ளை மாடு” கையெழுத்துப்படிகள் அவர் படித்தப் பின்பே நூல் வடிவம் பெற்றது. “ஒன்பது ரூபாய் நோட்டு” நாவலின் கையெழுத்துப் படிவங்களைப் படித்துவிட்டு அதற்கு தலைப்பு சூட்டியவரும் அப்பாதான். எந்தக்காரியத்தை தொடங்கினாலும் அவரிடம் கூறி கருத்தை அறிந்தபின்தான் செயல்படுத்துவேன்.

இறுதிக்காலத்தில் அம்மாவும் அப்பாவும் சென்னையிலேயே என்னுடன்தான் இருக்க வேண்டும் என்பதற்காக அவருக்காக என் வீட்டின் கீழ்த்தளத்தில் ஒரு அறையும் அமைத்தேன். சென்னை வாழ்க்கை அவருக்கு விருப்பமில்லை. புதுச்சேரி அந்தப்பெருமையை எடுத்துக்கொண்டது. மிகச்சிறந்த படைப்புகளுக்கு மிக அரிதாகவே சாகித்ய அகாடெமி விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு கட்டத்தில் இனி இவர் எழுத மாட்டார் வயதாகி விட்டது அல்லது இவருக்கு விருது வழங்கப்படாமல் இருந்ததற்காக இப்பொழுது கொடுத்து விடுவோம் என கொடுத்து விடுவதுதான் பெரும்பாலும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. கி.ராவுக்கும் அப்படித்தான் ‘கோபல்ல கிராமம்’ நாவலுக்குத் தரவேண்டியதை ‘கோபல்லபுரம் மக்கள்’ நாவலுக்குத் தந்தார்கள். இதே துயர சம்பவம்தான் சா.கந்தசாமி,நாஞ்சில் நாடன் போன்ற பலருக்கும் நிகழ்ந்தது.

கி.ரா வின் எழுத்துக்களை அனுபவிக்காதவர்களைப்பார்த்து நான் பரிதாபப்படுவதுண்டு. இதையெல்லாம் வாசிக்காமல் இந்தப்பிறவியை வீணாக்குகிறார்களே எனத்தோன்றும். ஊஞ்சலில் அமர்ந்துகொண்டு இட்லி காபியைப்பற்றி எழுதி இலக்கியம் படைத்தவர்களுக்கிடையில் எழுத்தறிவில்லாத உழைக்கும் எளிய உழவுக்குடி கிராமத்து மக்களின் வாழ்க்கையை அவர்களின் மொழியிலேயே படைப்புக்களாக்கியவர் கி.ரா. அது மட்டுமல்லாமல் மக்களின் வாழ்வியலோடு கலந்து உறவாடுகின்ற நாட்டுப்புறக் கதைகளையும்,விடுகதைகளையும் அலைந்து தேடிப்பிடித்து பதிவு செய்து ஆவணமாகவும் இலக்கியப்படைப்புக்களாகவும் மாற்றியவர். கி.ரா வின் நாட்டுப்புற சொல்லகராதியை இனி எவராலும் உருவாகிவிட முடியுமா அல்லது அதை அழித்துவிட முடியுமா. அவருடைய எழுத்துக்கள்தான் நகரம் நோக்கி ஓடி வந்த என்னை மீண்டும் கிராமத்திற்கே இழுத்துக்கொண்டுப் போனது.

நாடக வடிவிலான சொல்லாடல்களையும் உரையாடல்களையும் கொண்டு இலக்கியம் படைத்த வேளையில் மக்களின் இயல்பான சொற்களால் தமிழின் தற்கால இலக்கியத்தை மக்களின் மனதுக்கு மிக நெருக்கமாக்கியவர். கொண்டாடித்தீர்த்த எழுத்தாளர்களெல்லாம் காலப்போக்கில் காணாமல் போயிருக்கிறார்கள். அவர்களெல்லாம் எழுத்தாளனாக வேண்டும் என்பதற்காக எழுதியவர்கள். வெறும் நான்காம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிக்குச் சென்ற கி ராஜநாராயணன் “மழைக்காகத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கினேன். அப்பொழுதுகூட மழையையே பார்த்துக்கொண்டிருந்து விட்டேன்” எனக்கூறினார். மழையும் மண்ணும் மக்களும் ஆடு மாடுகளும்தான் அவரை எழுத்தாளனாக்கியது.

அசல் வாழ்க்கையையும்,தன் மொழியையும் இழந்து கொண்டிருக்கும் இத்தலைமுறையும், எதிர்காலத்தலைமுறைகளையும் இழுத்துக்கொண்டுபோய் கி ரா போன்றவர்களின் படைப்புகளிடம் சேர்க்க வேண்டிய கடமையும் பொறுப்பும் ஆண்டுகொண்டிருக்கும்,இனி எதிர் காலங்களில் ஆளப்போகும் ஆட்சியாளர்களுக்கும் உண்டு.

இயக்குனர் தங்கர் பச்சானின் இயக்கத்திர்  கி.ராஜநாராயணன் குறித்த ஆவணப்படம்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction