ஸ்ரீ முருகப்பெருமானின் அம்சமாகவே திகழ்வது அவரது திருகரத்தில் திகழும் வேலாயுதம்.வேலை மட்டுமே பிரதிஷ்டை செய்து வழிபடும் சில கோயில்கள் உண்டு.
நாம் எண்ணிய பலன்களை தரவல்லது, நம்மை காப்பது இந்த வேலாயுதமே .முருகப்பெருமானது திருக்கைவேலை போற்றி பல பாடல்களை பாடியுள்ளார் ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சார்ய ஸ்வாமிகள்.
அதில் வீரவாகுதேவர் வேற்கடவுளை போற்றும் பாடல் தனித்துவமானது. அப்பாடல்,
"அந்தமில் ஒளியின் சீரால் அறுமுகம் படைத்த பண்பால்,
எந்தைகண் நின்றும் வந்த இயற்கயால் சத்தியாம்பேர்,
தந்திடும் பனுவல் பெற்ற தன்மையால் தனிவேல் பெம்மான்,
கந்தனே என்ன நின்னைக் கண்டுளக் கவலை நீத்தோம். "
அழிவில்லாத ஒளியுடைய சிறப்பாலும், ஆறுமுகங்களை பெற்றிருக்கும் தன்மையாலும், எம் சிவபரம்பொருளிடம் இருந்து வந்த தன்மையாலும்,
சத்தியாயுதம் என்ற திருநாமம் பெற்ற தன்மையாலும் ,ஒப்பில்லாத வேற்கடவுளே, உம்மையே கந்தனாக உள்ளத்தில் போற்றி எம் துன்பத்தை போக்கிகொண்டோம் என வீரவாகுதேவர் போற்றுகின்றார் .
சூரனோடு திருவிளையாடலாக போர் செய்துவருகின்றார். இம்மெனும் நேரத்தில் அழிக்கும் வன்மை கொண்ட கந்தக்கடவுள். தேவர்கள் தலைவனாகிய இந்திரன் சூரனது உயிரை விரைந்து வாங்குவீராக என பணிந்து வேண்டிட ஸ்ரீ முருகப்பெருமான் தம் திருகரத்தில் உள்ள வேலினை
நோக்கி,
"அங்கு அவர் மொழியும் வெய்யோன் ஆற்றலும் தெரிந்து செவ்வேள்,
செங்கையது ஒன்றில் வைகும் திருநெடுவேலை நோக்கி,
இங்கு இவன் ஆகம் போழ்ந்தே ஏகுதி இமைப்பின் என்னாத்,
துங்கமது உடைய சீர்த்திச் சூரன்மேல் செல்லத் தொட்டான்." என்றபடி, இப்பொழுதே சூரனது உடலை இருகூறாக்கிட விரைந்து செல்க என்றார்.
ஆயிரம்கோடி சூரியனை போல் பிரகாசிக்க, வேலானது சூரனை நோக்கி ஸகல புவனமும் மகிழ பாய்ந்து சென்றது. சூரனோ அழிவற்ற வரம் பெற்ற என்னை இந்தவேல் என்ன செய்யும் என அகந்தையோடு உள்ளே அச்சமும் வெளியே சினமும் கொண்டான்.அண்டசராசரங்களையும் அழிப்பேன் என்ற ஆணவத்தோடு கடலின் நடுவில் சென்று நின்றான் சூரபத்மன். கடலில் எவ்வாறு நின்றான் என்றால்,
"செந்நிற மணிகள் என்னத் தீம்பழம் கொண்டு கார்போல்,
துன்னுபல் சுவடு போக்கிச் சூதமாய் அவுணன் நின்றான். "
என்றபடி மேகம்போன்ற அடர்ந்த பல கிளைகளைக் கொண்டு , எமனே அஞ்சும் அளவிற்க்கு ஆர்பரித்து பெரும் மாமரம் வடிவம் கொண்டு நின்றான்.திருமால், பிரம்மன், இந்திராதி தேவர்கள் முனிவர் என அனைவரும் கண்டு அஞ்சுமாறு சூரன் ஒப்பற்ற மாமரமாய் நின்று ஆர்பரித்தான். அந்நிலையில் முருகப்பெருமானது திருக்கை வேலானது அக்னிபிழம்பாக சூரனை நோக்கி பாய்ந்தது.
"விடம்பிடித்து அமலன் செங்கண் வெங்கனல் உறுத்திப் பாணி,
இடம்பிடித்திட்ட தீயில் தோய்ந்துமுன் இயற்றி அன்ன,
உடம்பிடித் தெய்வம் இவ்வாறு உருகெழு செலவின் ஏகி,
மடம்பிடித்து இட்ட வெஞ்சூர் மாமுதல் தடிந்தது அன்றே. "
நஞ்சுண்ட சிவபெருமானின் நெற்றிக்கண் தீயில் பொருந்தி, அவர் தம் இடக்கரத்தில் ஏந்திய அக்னியில் தோய்ந்தது சென்றது போன்று, #தெய்வத்தன்மை பொருந்திய வேல், அறியாமை மிக்கவனாய் ஆணவமாய், மாமரவடிவமாய் நின்ற சூரன்பத்மனை வெட்டுண்டு தாக்கியது.
வெட்டுண்ட சூரன் இறந்தானா என்றால்,
"மேலைநாள் வரத்தின் என்றால்
பீடுற தவமே அன்றி வலியது பிறிதொன்று உண்டோ.".என்றபடி, அவன் செய்த தவம், பெற்ற வரம் அழியவிடவில்லை.எனவே சூரன் மாமர வடிவம் நீங்கி, முந்தைய பழைய வடிவம் கொண்டு உடைவாளை எடுத்து போரிட முயன்றான். அப்பொழுது ,
"செங்கதிர் அயில்வாள் கொண்டு செருமுயன்று உருமின் ஆர்த்துத்,
துங்கமொடு எதிர்ந்து சீறும் சூர்உரம் கிழித்துப் பின்னும்,
அங்கமது இருகூறாக்கி அலைகடல் வரைப்பில் வீட்டி,
எங்கனும் மறைகள் ஆர்ப்ப எஃகம்வான் போயிற்று அம்மா. "
சிவந்த கூர்மையான வாளைக் கொண்டு போரிட முயன்ற, சூரபத்மனின் மார்பினை, வேல்கடவுள் கிழித்து உடலை இரு கூறுகளாக்கி அலைகளை உடைய கடலில் வீழ்த்தி, வேதங்கள் எங்கும் ஒலிக்க முருகப்பெருமானது திருக்கை வேலானது வான்வழியே சென்றது .
சென்ற அவ்வேல் ஆகாய கங்கையில் மூழ்கித் பின் கந்தக்கடவுளின் திருக்கரத்தை வந்து சேர்ந்தது .
தனக்குத்தானே தலைவனாகிய சிவபெருமானிடம் பெற்ற வரத்தால் இறக்காத சூரன், இரு கூறுகளாகப் பட்ட அவனது உடலானது சேவலும் மயிலுமாக வடிவம் கொண்டது.அவ்வாறு சேவலும் மயிலுமாய் வடிவம் கொண்டபொழுதும் பழவினையால் மீண்டும் குமரனை எதிர்க்க செருக்குடன் ஞானநாயகனாம் முருகப்பெருமான் முன் வந்ததான். எதிரே நின்ற சேவல் மயில் வடிவ சூரன் மீது, ஞானத்தலைவனாகிய குமரன் தமது கருணைப் பார்வையை செலுத்த, அவனது பழவினை பாசவினை நீங்கி பகமை உணர்வு இன்றி தெளிவு பெற்று நின்றான்.
"தீயவை புரிந்தாரேனும் குமரவேல் திருமுன் உற்றால்,
தூயவர் ஆக மேலைத் தொல்கதி அடைவர் என்கை,
ஆயவும் வேண்டும் கொல்லோ அடுசமர் இந்நாள் செய்த,
மாயையின் மகனும் அன்றோ வரம்பிலா அருள்பெற்று உய்ந்தான். "
கொடுமையான பல தீமைகள் புரிந்தவராயினும், கண்ணீர்மல்க மனம் திருந்தி குமரக்கடவுளை சரண் என அடைந்தால், தூய்மை பெறுவதோடு, மேலான பதவியும் அடைவர். மாயையின் மகனாகிய சூரன் அத்தகைய திருவருளை பெற்றான் .உய்ந்தான் . இவ்வாறு அருள்பெற்ற நிலையில்,
சூரன் வடிவ சேவலை தம் தேரில் கொடியாகி ஆரவாரம் செய்வாயாக என்றும் . அதே சூரன் வடிவ #மயிலை தம் வாகனமாக்கி அதன் மீது ஏறி அமர்ந்து, தம்மை சுமக்குமாறு அருள் செய்தார். தவத்தினால் சிறப்புடையவன் சூரன். எனவே சேவலும் மயிலுமாக முருகப்பெருமானோடு நிற்கும் புண்ணியம் பெற்றான்.
ஸ்ரீ முருகப்பெருமானது திருவருள் கருணை எப்பொழுதும் ஒருவரை அழிக்க துணை நிற்காது. பகைவரின் தீயகுணங்களை போக்கி, நல்வழிப்படுத்தி ஆட்கொள்ளவே துணை செய்யும். குமரக்கடவுளின் அம்சமான வேலை வழிபட்டாலே கவலைகள் நீங்கும், பயம் அகலும், வெற்றிகள் கிட்டும் என்பது உறுதி .
"சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயல் பொழில் தேன் கடம்பின்
மால் பட்டு அழிந்தது பூங் கொடியார் மனம் மா மயிலோன்
வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வேர்ப்பும் அவன்
கால் பட்டு அழிந்தது இங்கு என் தலை மேல் அயன் கையெழுத்தே "
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !
- தில்லைக் கார்த்திகேய சிவம்.
