அன்னமும் சிறப்பு. அபிஷேகமும் விஷேடம். பரம்பொருளான சிவபெருமானுக்கு செய்யப்படும் அன்னாபிஷேகம் எல்லாவற்றையும் விட அற்புதமானது என்கிறது வேதம்.
அன்னம் பிராணன் என்றும், அஹமன்னம் எனவும் வேதங்கள் போற்றுகின்றன. ஒருவன் எத்தகைய உணவு உண்கிறானோ அதைப் பொறுத்தே அவனது மனம் இருக்கும் என்கின்றன நமது உபநிடதங்கள். அதையே பெரியோர்கள் அன்னம் எப்படியோ எண்ணமும் அப்படியே என்று சொல்லிவைத்தார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த அன்னத்தைக் கொஞ்சம் கூட வீணாக்கலாகாது என்பதை உணர்த்தவும், அன்னத்தின் தெய்வீகத் தன்மையை எடுத்துக் காட்டவுமே, ஆலயங்களில் இறையுருவுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
நமது பேரண்டம் நிலம், நீர், ஆகாயம், காற்று, நெருப்பு எனும் பஞ்ச பூதங்களால் ஆனது. அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் என்ற திருமூலர் வாக்குப்படி, நமது உடலுக்கும் பஞ்சபூதங்களுக்கும் தலைவன் சிவபிரான். பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் பூமியில் உண்டாவது அன்னம். நிலத்தில் விழும் நெல், ஆகாயத்திலிருந்து பெய்யும் மழை நீரின் உதவியால் வளர்ந்து, காற்றினால் கதிர்பிடித்து, சூரியனின் வெப்பத்தீயினால் பால் இறுகி விளைச்சலைத் தருகிறது. காற்றின் உதவியுடன் கதிரடித்து எடுக்கப்படும் நெல், உமி நீக்கப்பட்டு அரிசியான பிறகு, மண்ணால் ஆன பானையில் நீரில் இடப்பட்டு, காற்றின் துணையால் எரியும் நெருப்பில் வெந்து, அன்னமாகி ஆகாயத்தின் கீழ் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உணவாகிறது.
பஞ்சபூதங்களை சரியான வகையில் செயல்படச் செய்து, உயிர்களுக்கு உணவும் நீரும் குறைவின்றி கிடைக்க அருள் செய்த ஈசனுக்கு நன்றி சொல்லும் வகையிலும், நாட்டிலும் வீட்டிலும் எக்காலத்திலும் உணவுப் பஞ்சம் வராமல் இருக்கவும் இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்தினர்.
ஐப்பசி மாதப் பூரணையில், சந்திரன் தனது சாபம் முழுமையாக நீங்கி, முழுநிலவாகத் தெரிகிறார். அக்டோபர், நவம்பர் (ஐப்பசி) மாதத்தில் நிலவு, பூமிக்கு மிக அருகில் வந்து தனது முழு ஒளியையும் பூமியை நோக்கி வீசுகிறது என வானவியல் கூறுகிறது.நவக்கிரஹ வழிபாட்டில், சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி. இதனால் பூமிக்கு அருகில் சந்திரன் வரும் ஐப்பசிப் பௌர்ணமியில், சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகம் முழுவதும் நன்மைபெறும் என்றார்கள் முன்னோர்கள்.
ஐப்பசி மாத பூரணை நாளில், ஐந்து வகைப் பொருட்களால் சிவனுக்கு முதலில் அபிஷேகம் செய்து, பின்னர் நன்கு வடித்து ஆறவைத்த அன்னத்தைக் கொண்டு அன்னாபிஷேகம் செய்யப்படும்.அன்னாபிஷேகத்தின்போது அப்பம், வடை உள்ளிட்ட பலகாரங்களையும் காய்கறி, கனி வகைகளையும் கொண்டு அலங்காரம் செய்வது பிற்கால வழக்கமாயிற்று.
சிவலிங்கத் திருமேனியின் எல்லா பாகங்களுக்கும் முழுமையாகவே அன்னாபிஷேகம் செய்யப்படும். அன்னாபிஷேகம் செய்த அன்னத்தை பின்னர் கோயில் குளத்திலோ இல்லை ஆற்றிலோ கரைப்பார்கள். இதன் மூலம் அன்னாபிஷேகப் பிரசாதம் நீரில் வாழும் புழு, பூச்சிகள், மீன்கள், மற்ற நீர் வாழ் உயிரினங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே நோக்கமாகும். அன்னாபிஷேகத்தின் மற்றுமொரு பகுதி, பக்தர்களுக்கு பிரசாதமாக வினியோகிக்கப்படும். சில கோயில்களில் இந்த அன்னத்துடன் தயிர் சேர்த்துக் கொடுக்கும் பழக்கமும் உண்டு. வேறுசில இடங்களில் இந்த அன்னத்தை வேகவைத்த காய்வகைகளுடன் சேர்த்து, கறியமுதாகவும் தருவார்கள்.
கறியமுது என்றதும், சென்ற வருடம் பிரிட்டிஷ் அருங்காட்சியகமொன்றில், சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டதாகக் கூறப்படும், கோணேஸ்வரர் சாசனம் எனும் "கோணேசர் கல்வெட்டு" சுவடிகளில் காணக்கிடைத்த இரு பாடல்களில் கறியமுது பற்றிய குறிப்புக்கள் இருக்கக் கண்டமை நினைவுக்கு வருகின்றது.
" மையனையகண்டருக்குத்துய்யசம்பாவரிவகைவகுத்தெடுத்தே
யையமறவமுதுசெய்தேயலங்காரத்தளிசைமிசையழகாய்வைத்துத்
துய்யதிருக்கறியமுதுசுரபியின்பாற்குழம்பினொடுதுகடீர்தூய
வெய்யதிருப்பணிகாரம்பலவாசனைகமழவிளங்கவையும் " என 38வது பாடலிலும்
"செய்யமஹாமண்டபத்தினப்பணங்ஙன்சிறந்தவொருமுழவகல
நீளமாகத்துய்யசம்பாவடிசிலது சொரிந்துதட்டித்துகளிலொன்பா
ன்மூன்றுபிடிச்சுற்றில்வைத்துவெய்யதிருக்கறியமுதுபணிகாரம்பா
ல்வேண்டியசர்க்கரைகனிதேன்வெகுவாய்நெய்யும்பெய்துவந்துதி
ரிநிறுத்திமகிழ்வாய்நீரும்பெட்புடன்பாகிலைதூபம்பெருகச்செய்யும்
எப்போதுமுப்போதுமிப்படித்தென்கோணமலையிறைவன்பூ
சைத்தபாமனீவிர்செய்க" என மற்றுமொருபாடலிலும் கறியமுது பற்றிய குறிப்புக்கள் உண்டு.
இந்தக் கல்வெட்டு மரபின் நீட்சியில் வந்த செயலாக, இன்றளவும் தம்பலகாமம் ஆதி கோணேஸ்வரர் கோவிலில் தளிகைச் சாதத்தின் மேல்,
கத்தரிக்காய், வாழைக்காய், பயற்றம்பருப்பு, மஞ்சள்தூள், சேர்த்தவித்து, உப்புச் சேர்க்காமல் தேங்காய்ப்பால் சேர்த்து, மிளகு சீரகத்தூள் சேர்த்துவரும் அமுதாக வரும் கறியமுதினை நிவேதனம் செய்வார்கள். அந்தக் கறியமுதே ஒரு லிங்கத் திருமேனியாகக் காட்சிதருவது மேலான சிறப்பு.
எல்லோரும் எல்லாமும் பெற, அன்னாபிஷேக நன்னாளில், கைலையங்கிரிவாசனைப் போற்றிப் பரவுவோம்.
- 4தமிழ்மீடியாவிற்காக : மலைநாடான்
