தனுஷ் நடிப்பில் வெளியான ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநரும் நடிகருமான எஸ்.எஸ்.ஸ்டான்லி உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
கடந்த 2002-ம் ஆண்டு ஸ்ரீகாந்த், சிநேகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஏப்ரல் மாதத்தில்’. இந்தப் படத்தை இயக்கியவர் எஸ்.எஸ்.ஸ்டான்லி. முதல் படமே வெற்றிப்படமாக அமைந்ததையடுத்து தனுஷை வைத்து ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன் என்ற படத்தை எடுத்தார். பின்னர் எஸ்.எஸ்.ஸ்டான்லி எடுத்த ஸ்ரீகாந்தின் ‘மெர்குரி பூக்கள்’, ‘கிழக்கு கடற்கரை சாலை’ உள்ளிட்ட படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதன்பிறகு நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் ஸ்டான்லி. கடந்த 2007-ம் ஆண்டு ஞான. ராஜசேகரன் இயக்கிய ' பெரியார் ' படத்தில் அறிஞர் அண்ணா கேரக்டரில் சிறப்பாக நடித்திருந்தார். ‘ராவணன்’, ‘ஆண்டவன் கட்டளை’, ‘சர்கார்’, ‘பொம்மை நாயகி’ என பல படங்களில் நடித்தவர் கடைசியாக ‘மகாராஜா’ படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் உடல்நலன் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த எஸ்.எஸ்.ஸ்டான்லி காலமானார். அவரது இறுதி சடங்கில் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பங்கேற்றனர்.