free website hit counter

« தவறுகளின் அழகு », பெயரே அழகாக இருக்கிறதல்லவா !

திரைப்படவிழாக்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் 2026 ஏப்ரல் 16 முதல் 26 வரை, நடைபெற்ற மிகப்பெரும் சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவான visionsdureel 57வது பதிப்பில், போட்டிப்பிரிவில் இல்லாத, ஆனால் பார்க்கப்படவேண்டிய படமாக பரிந்துரைக்கப்பட்ட படம் "தவறுகளின் அழகு"

சுவீடன், நோர்வே, பின்லாந்து இணைதயாரிப்பில் ஸ்கண்டினேவிய தனிமை நிலைப்பிரதேசங்களில் நடைபெறும் கதை. Jukka Kärkkäinen இயக்கிய இந்த ஆவணத்திரைப்படத்தில் வரும் தந்தையும், மகனும் இரு மிகப்பெரும் புனைவுத் திரைப்படங்களில் வரும் கதாநாயர்கள் போன்று அவ்வளவு நடிப்புத்திறமையும் இருப்பவர்கள். 

எப்படி சாதாரண இருவரை இவ்வளவு அந்நியமாக, நெருக்கமாக, அவர்களின் இயல்பான உடலமைப்புடன், அவர்களது முழியுடன் காண்பிக்க முடியும் என  கேட்டுக் கொண்டே இருந்தேன். இயக்குனர் அவர்களை 15 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்திருக்கிறார். கிட்டத்தட்ட அவர்களுடன் அவர்கள் வீட்டிலேயே வாழ்ந்ததற்கு சமம். அதனால் தான் ஒரு கட்டத்தில், கமெராவை அந்த இருவரும் மறந்துவிட்டிருப்பார்கள். அல்லது கமெராவும் அவர்கள் குடும்பத்தில் ஒருவராகியிருகும். 

படம் தொடங்கிய முதல் 10 நிமிட எழுத்தோட்ட காட்சியே ஒரு காவியம். கவிதை. நிச்சயம் புனைவாக, நடிகர்களை கொண்டு மறுவுருவாக்கம் செய்திருக்க வேண்டும் என நினைத்திருந்தேன். 

பிள்ளை பிறக்கும் முன்னர் தாய் கருவுற்றிருக்கும் தருணம், பிறக்கப்போகும் பிள்ளையை நினைத்து தந்தை கனவுகாண்கிறார். பிறப்புக்கு இருவரும் தயாராகின்றனர். பிள்ளை பிறப்பின் போது மருத்துவமனையில் சிக்கல் ஏற்படுகிறது. பிழைப்பானா என அச்சம் ஏற்படுகிறது. தந்தை தனியாக வீட்டில் இருந்து தேம்பித் தேம்பி அழுவார். பிள்ளை பிறந்து வீட்டுக்கு கொண்டுவருவார்கள். அதன் பின் தாயின் பயணம் முடிவடைகிறது. தந்தை தனியாக அப்பிள்ளையை வளர்க்கத் தொடங்குகிறார். 5 வயது, 10 வயது, 15 வயதாகிறது. தந்தைக்கு, அப்பிள்ளையே உலகமாகும் அனைத்து பூரிப்பும், ஒரு கவிதை தொகுப்பு போல் காட்சிகளுடனும், இசையுடனும், எழுத்தோட்டத்தில் மாத்திரம் வந்து முடிவடையும். அவ்வளவும் ஆவணப்படுத்தப்பட்ட காட்சிகளே. 

எழுத்தோட்டம் முடிவடைந்து படம் தொடங்கும் போது, 15 வயது மகனுக்கும், குடியாலும் மனக்குழப்பத்தாலும், கெட்டு கொஞ்சம் கொஞ்சமாக சீரழிந்து கொண்டிருக்கும் அந்த தந்தைக்கும் இடையில், இன்னமும் முறிவடையாத அழகான, அன்பான அந்த உறவை நாம் காணத்தொடங்குகிறோம். தந்தைக்காக சமைக்கத் தொடங்குகிறான். கார் இயந்திரங்களை திருத்தும் பணிகளை தந்தையுடன் அவ்வப்போது சேர்ந்து கற்றுக் கொள்கிறான். தந்தையை குடிக்க வேண்டாம் என்கிறான். தனது தாத்தா பாட்ட்டியுடனும் நேரம் செலவழிக்கிறான். இப்படி மெல்ல மெல்ல முதல் பாதியில், அவர்களது தனித்த உலகத்தினையும், தந்தையின் மனவிரக்தியின் வெளிப்பாட்டினையும், மகனின் முதிர்ச்சித் தன்மையையும் காண்பித்த படி நகரும் திரைக்கதையில், மகன் திடீரென, தனது காதல் தோழியை வீட்டுக்கு கூட்டி வருகிறான். இருவரும் அதே வீட்டிலேயே தங்குகின்றனர். இந்த வீடு எனக்கு இனி அதிகமாக தேவை என்கின்றான் மகன் தகப்பனிடம். 

தகப்பன், தனது இயலாமை, மன விரக்தி, குடிப் பழக்கம் என்பவற்றிலிருந்து விடுபட நினைத்து நினைத்து முடியாது தவிக்கிறார். இதில் மகன் தனித்து வாழத் தொடங்கிவிட்டான் என தெரிந்ததும் மேலும் அதிர்ச்சி ஆகிறார். ஆனாலும் அவர்களது அன்புறவில் எந்த மாற்றமும் இல்லை. 

மூவரும் சேர்ந்தே வாழ்கின்றனர். மகன் கார் ஓட்டப் பழகுகிறான் தந்தையுடன் சேர்ந்து. பரீட்சை எழுதுகிறான். தோற்றுப் போகிறான். புலம்புகிறான். மறுபடி எழுதுகிறான். பயிற்சி காட்டுகிறான். ஜெயித்துவிடுகிறான். காரில் தனியாக வேலைக்கு பயணிக்கத் தொடங்குகிறான். தந்தையும், மகனும் சேர்ந்து விடுமுறைக்கு இத்தாலி சென்று வருகின்றனர். 

நான் ஒருவேளை வாழ்வை முடித்து கொண்டாலும், நீ இனிமேல் தனியாக உன்னை பார்த்து கொள்ளும் பக்குவம் வந்துவிட்டது, என சொல்லி கண்கலங்குகிறார் தந்தை. என் 30 வயது பிறந்தநாளுக்கும், நான் நேசிப்பவர்கள் என்னுடன் அருகில் இருக்க பிரார்த்திக்கிறேன் என்கிறான் மகன். இருவரும் தங்களை தாங்கள் பார்த்துக்கொள்ளாது கதைக்கும் இந்த உரையாடலுக்கு சற்று நேரத்துக்கு பிறகு படம் முடிவுக்கு வருகிறது. 

தனித்துவிடுவோம் எனும் பயத்தையும் தாண்டி, தாம் விடும் தவறுகளையும் கடந்து, எப்படி வாழ்க்கையை அழகாக பார்ப்பது, ரசிப்பது என்பதை சொல்லாமல் சொல்லி படம் முடிவடைகிறது. 

இந்தப்படத்தை பற்றி நான் சொன்ன கதைக்களத்தை தாண்டி ரசிப்பதற்கு இன்னமும் பல இருக்கின்றன. இந்த படத்தை நான் பார்த்தது போல் ஒரு பெரிய திரையில், பல பேருடன் சேர்ந்து 120 நிமிடங்கள் உட்கார்ந்து பார்த்தால் தான் சினிமாவின் அந்த அழகியல் உங்களுக்கு புரியும். 

படம் நெடுக ஒன்றுமே நடக்காதது போல் இருக்கும். நாய் குறைப்பது, இரவில் படுத்திருப்பது, குடிப்பது, சமைப்பது, கைத்தொலைபேசி பார்ப்பது, ஜன்னலால் வெரிச்சோடிய இயற்கையை பார்ப்பது, வாகனம் ஓட்டுவது, என இவை மட்டும் அடிக்கடி வந்து போவது போல் இருக்கும்.

ஆனால் படம் பார்த்து முடிக்கையில், வாழ்க்கை இவ்வாறான சின்ன சின்ன தருணங்களால் தான் கட்டி யெழுப்படுகிறது, அதை படம்பிடிப்தற்கு தான் அதிக நேரம் தேவை என்பது புரியும்.

மறுபடியும் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி. 

https://www.visionsdureel.ch/film/2026/the-beauty-of-errors/


- 4தமிழ்மீடியாவுக்காக: நியோனிலிருந்து ஸாரா 

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: