இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு, ஜம்மு காஷ்மீரின் எல்லையோர கிராமங்களில் பாகிஸ்தான் ராணுவத்தினர் பீரங்கிகள் மூலம் இந்தியர்களை மீது குண்டு வீசித் தாக்கியதில் குழந்தைகள் உட்பட 15 உயிரிழந்தனர்.
43 பேர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தானின் குண்டுவீச்சுத் தாக்குதலில் காஷ்மீரில் இருக்கும் பூஞ்ச் மாவட்டம் அதிக பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. உயிரிழந்த 15 பேரும் இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களே. அதேபோல் காயம் அடைந்த 46 பேரில் 30 பேர் பூஞ்ச் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். காயம்பட்டவர்களில் பலரின் உடல்நிலை கவலைக்கிடமாக
உள்ளது. உயிரிழந்தவர்களில் 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனிடையே, இந்திய ராணுவம் தனது எக்ஸ் பக்கத்தில், "பூஞ்ச் - ராஜோரி பகுதியில் உள்ள பீம்பர் பகுதியில் பீரங்கித் தாக்குதல் நடத்தி பாகிஸ்தான் மீண்டும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது என்று தெரிவித்துள்ளது. கடந்த 2021, பிப்ரவரி 25-ல் இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களுக்கு இடையேயான 2003 போர் நிறுத்த ஒப்பந்தத்தை
மீண்டும் உறுதி செய்ததில் இருந்து இரண்டு நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்த ஒப்பந்த மீறல் மிகவும் அரிதாகவே இருந்து வந்தது. தற்போது அந்த நிலைப்பாடு மாறியிருப்பதாக தெரிய வருகிறது.