டெல்லி ஆளுகைக்கு தமிழ்நாடு என்றைக்கும் அடிபணியாது என்றும் மற்ற மாநிலங்களைப் போல ரெய்டுகளால், கட்சிகளை உடைக்கும் பாஜகவின் பார்முலா தமிழகத்தில் நடக்காது எனவும் கூறியுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அரசு ஏற்படுத்தும் தடைகளை சட்டபூர்வமாக ஒவ்வொன்றாக உடைப்போம் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், சென்னை சுற்று வட்டாரங்களில் தொழில்வளாகங்களை உருவாக்கியவர் கருணாநிதி என்றும் கண்ணாடி முதல் கார் வரை அனைத்து தொழில்களும் அவரது ஆட்சியில்தான் தொடங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அதிமுகவின் இருண்ட ஆட்சிகாலத்தில் முடங்கிக் கிடந்த உள்கட்டமைப்பு வளர்ச்சிப் பணிகள், கடந்த 4 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில்தான் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது என குறிப்பிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டை அடகு வைக்க வேண்டும் என்பதே சந்தர்ப்பவாதிகளின் ஒரே நோக்கம் எனவும் கூறினார்.
இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களுக்கும் சேர்த்து தான் தமிழ்நாடு போராடுகிறது என்றும் மாநில உரிமைகளின் அகில இந்திய முகம் திமுக தான் எனவும் ஸ்டாலின் அப்போது குறிப்பிட்டார். மேலும் நீட் தேர்வு, மும்மொழிக் கொள்கை, வக்பு சட்டத் திருத்தம், தொகுதி மறுசீரமைப்பு என அனைத்திற்கும் எதிராக திமுக அரசே இந்திய அளவில் வலுவாக ஓங்கி குரல் கொடுத்து வருகிறது என்றும் ஸ்டாலின் பேசினார்.
கட்சிகளை உடைக்கும் ஃபார்முலா தமிழகத்தில் எடுபடாது எனவும் மற்ற மாநிலங்களில் செய்வது போல் தமிழ்நாட்டில் உங்கள் வேலையை காட்ட முடியாது என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.