இராணுவ நடவடிக்கைகள், செயல்பாடுகள் குறித்த செய்திகளை வெளியிட வேண்டாம் என்று ஊடகங்களுக்கு இந்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது.
பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையோருக்கு கற்பனைக்கு எட்டாத வகையில் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு, கண்காணிப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. "அக்ரன்" என்ற பெயரில் இந்திய விமானப் படை சிறப்பு போர் ஒத்திகையை நடத்தி வருகிறது. இதில் ரஃபேல் போர் விமானங்கள் பங்கேற்றுள்ளன. ஐஎன்எஸ் சூரத் போர்க்கப்பலில் இருந்து அண்மையில் பிரம்மோஸ் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பெருமளவில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த சூழலில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அனைத்து ஊடகங்களுக்கும் சுற்றறிக்கையை அனுப்பியது. அதில் தேசத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அனைத்து ஊடகங்களும் சட்ட விதிகளை பின்பற்றி அதிகபட்ச பொறுப்புணர்வுடன் செய்திகளை வெளியிட வேண்டுகிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக ராணுவ
நடவடிக்கைகள் மற்றும் ராணுவத்தின் நகர்வுகள் குறித்த செய்திகளை வெளியிட வேண்டாம் எனவும் ராணுவ நடவடிக்கைகள் குறித்த செய்திகள் எதிரிகளுக்கு சாதகமாக அமைந்துவிடும் என்றும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.
கார்கில் போர், மும்பை தாக்குதல், காந்தஹார் விமான கடத்தல் உள்ளிட்ட சம்பவங்களின்போது எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் செய்திகள் வெளியாகின எனவும் இவை நாட்டின் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தின என்றும் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை குறிப்பிட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பில் ஊடகங்களுக்கு முக்கிய
பங்கு இருப்பதால் பாதுகாப்பு படைகளின் நடவடிக்கைகள் தொடர்பாக எந்த செய்தியையும் வெளியிட வேண்டாம் என்றும் ராணுவ நடவடிக்கைகளை ஒருபோதும் நேரலையாக ஒளிபரப்பு செய்யக்கூடாது எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.