ரேஷன் கடைகளில் கலப்படப் பொருட்களை வழங்கி மக்களின் உயிரோடு விளையாடக் கூடாது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் தொடர்ந்து 50 ஆண்டு காலமாக நடைபெற்று வரும் திராவிட ஆட்சியில் ஊழல் முறைகேடுகள் நடைபெறாத துறையே இல்லை என்றும் அனைத்து அரசுத் துறைகளிலும்
ஊழல் மலிந்து காணப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, உணவு பொருள் வழங்கல் துறையின் கீழ் பொது விநியோக திட்டத்தில், மக்களுக்கு இலவச உணவுப்பொருள் வழங்குகிறோம் என்ற பெயரில் உண்ணவே முடியாத அளவுக்கு தரமற்ற கலப்பட அரிசி பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது எனவும் அதைத்தொடர்ந்து
பொங்கல் தொகுப்பில் பல்லி விழுந்த புளி, உருகிய வெல்லம், உடைந்த கரும்பு என தரமற்ற பொருட்களை வழங்கியதாகவும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் நடத்திய திடீர் ஆய்வில், தமிழக அரசின் பொது வழங்கல் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட இருந்த துவரம் பருப்பில், பட்டாணி பருப்பு கலப்படம் செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ள சீமான் திராவிடமே கலப்படம் எனும்போது திராவிட ஆட்சியில் அனைத்து துறையிலும் கலப்படம் இருப்பதில் வியக்க ஒன்றுமில்லை
என்று தெரிவித்துள்ளார்.
ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு மலிவு விலையில் உணவுப்பொருள் வழங்குவதாக மார்தட்டும் திமுக, கலப்படப் பொருட்களை வழங்கி மக்களின் உயிரோடும், உடல் நலனோடும் விளையாடுகின்ற முறைகேடுகளை உடனடியாக களைய வேண்டும் எனவும் ரேஷன் கடைகள் நியாயமாக செயல்படுவதை தமிழக அரசு உறுதிசெய்ய வேண்டும்
என்றும் சீமான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.