மாநில பல்கலைக்கழக துணைவேந்தர்களை தமிழக போலீஸார் மிரட்டியதால்தான் உதகை துணைவேந்தர்கள் மாநாட்டில் அவர்கள் பங்கேற்கவில்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டினார்.
நீலகிரி மாவட்டம் உதகை ராஜ்பவன் மாளிகையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற்றது. மாநாட்டுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகித்தார். குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
இந்நிலையில், இந்த மாநாட்டில் மாநில பல்கலைக்கழக துணைவேந்தர்களின் பெரும்பாலானவர்கள் பங்கேற்காதது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “இந்த மாநாட்டில் மாநில பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை என்றும் மாநில அரசின் போலீஸார் அவர்கள் தங்கியிருந்த
பகுதிகளுக்கு சென்று கதவை தட்டி, நீங்கள் வீடு திரும்ப முடியாது என மிரட்டியுள்ளனர் என்றும் கூறினார்.
இந்தியாவிலேயே சிறந்து விளங்கிய தமிழ்நாடு பல்கலைக்கழகங்களின் நிலை தற்போது கவலைக்குரியதாக உள்ளது என்றும் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலையுள்ளதாகவும் அவர் கூறினார். பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பு இன்னமும் ஆளுநர் வசம் உள்ளதா அல்லது முதல்வர் கைக்கு மாறிவிட்டதா என்பதில் இன்னும் குழப்பம் நிலவிய பின்புலத்தில்தான் ஆளுநர் மாளிகை சார்பில் துணைவேந்தர்கள் வருடாந்திர மாநாடு உதகையில் தொடங்கியது.
இந்த மாநாட்டுக்கு 49 பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் பல்வேறு தனியார் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த துணைவேந்தர்கள் 32 பேர் கலந்து கொண்டனர்.
அதேசமயம் அரசு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த துணைவேந்தர்கள் பெரும்பாலானவர்கள் கலந்து கொள்ளவில்லை. பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மட்டும் பங்கேற்றார். பெரும்பாலான பல்கலைக் கழகங்களின் இயக்குநர்கள், டீன் மற்றும் பிரதிநிதிகள் மட்டுமே பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.